Sunday, October 31, 2004

ஒரு நாடுதேடி...




9 நவம்பர் 90 இரவு சுமார் 9 மணி

எங்கும் இருள்.. அமைதி..

படகை இயக்கிய இயந்திரத்தின்
பட பட ஓசையும்
முன்னேறும் படகில்
வீரத்துடன் மோதி உடையும்
அலைகளின் ஓசையும்
பின்னாலே படகு விரட்டிவிடும்
கடல் நீரின் சத்தமும்தான்...

அன்று வானத்தில் நிலவுக்கு
விடுமுறைபோல....
ஓரிரண்டு நட்சத்திரங்கள் தான்
கண்சிமிட்டிப்பேசிக்கொண்டிருந்தன...

சுற்றி எங்கும் கறுப்பாய்க் கடல்
ஆழம் என்ன என்று
வெளியில் காட்டாத கறுப்புக்கடல்
அமைதியான கடல்

படகு அலையில் மோதி அசைந்தாலும்
அது தொட்டிலில் வைத்து
ஆட்டியது போலத்தான்
சுகமாக இருந்தது..

அதனால் தான்
வேதனை, வெறுப்பு, விரக்த்தி, என
அத்தனையும் மறந்து
அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் அமைதியாக
அடங்கிப்போய் இருந்தார்கள்....

பலர் கண்மலர்ந்துவிட்டிருந்தனர்...
போதும் போதும் பட்டதுன்பம் போதும்
இனி சுதந்திரம் பெற்றஒரு புூமியில்
கண்விழிப்போம் என்று எண்ணியிருப்பார்களபோலும்....

அழுது அழுது ஓய்ந்த
கண்கள் அமைதியாக
ஓய்வெடுத்துக்கொண்டிந்தன...

படகின் முன்னாலே
இருந்தவர்கள் வாலிபர்கள்..
அலையடித்து மேலே கொட்டும்
கடல்நீரைககொஞ்சம்கூட
சாட்டைசெய்யவில்லை...
எத்தனையோ பார்த்தாயிற்று
இது என்ன என்று
அசைந்துகூடக்கொடுக்கவில்லை...

குளிர்ந்த காற்று மட்டும்தான்
அரவனைத்துச்சென்றது...
காதுக்குள் கவலைவேண்டாம் என்பதுபோல்...
ஏதேதோ அதன் மொழியில்
சொல்லிவைத்தது...

பாதிக்கண்
மூடியிருந்த என்கண்களில்
உன் விம்பங்கள்;...
உன் பேச்சொலிகள்...


9 நவம்பர் 90 அதிகாலை ஒருமணி

காதலியின் நினைவில்இருந்த நான்
எப்போது கண்ணயர்ந்தேன்?..
தெரியவில்லை...

படகின்இயந்திரம் நின்றுவிட்டிருந்தது...

தாலாட்டு நின்றதால் தடுமாறிவிழித்த
குழந்தைகள்போல் எல்லோரும்
என்னாயிற்று என்று சுற்றுமுற்றும்
பார்த்து எழுந்துகொண்டோம்....

தூரத்தில் இருளில் இருளாய்
மரங்கள் தெரிந்தது...


"வந்துவிட்டோமா மண்டபம்?" என்று
யாரோ மகிழ்ச்சிபொங்கக் கேட்டார்கள்...

இல்லை இது இரணைதீவு....
எனப்படுகின்ற இரட்டைத்தீவு...

'இன்று இங்குதான்
நாளை இரவு
இந்தியா போகிறோம்...
ஒருநாளுக்கு வேண்டியதை
எடுத்துக்கொண்டு இறங்குங்க.."
படகோட்டியுடன் வழிகாட்டியாகவந்த
மீனவநன்பன்
உத்தரவிட்டு படகில் அடிப்பகுதியில்
தேங்கியிருந்த தண்ணீரை எடுத்துவெளியே கொட்ட
ஆரம்பித்துவிட்டான்....

பெரிதாக அலைகள் இல்லை
ஆனாலும் ஆழம் தெரியவில்லை..
இருளாய் இருந்தது..

தூரத்தில் தெரிந்த மரங்கள்
தைரியம் தந்தது..
கடவுளை வேண்டிக்கொண்டு
ஆழம்தெரியாக்கடலில் காலைவிட்டோம்...

இரண்டடியில் தரை...
கால்களை வரவேற்று
தாங்கிக்கொண்டன..

யாரோ ஒருவர்
முன்னால் செல்ல
தட்டுத்தடுமாறி பின்னால்
சென்றோம்...

கோஞ்சத்தூரத்தில்
அமைதியாக ஒரு தேவாலயம்...
அடைக்கலமா வாருங்கள் வாருங்கள்
என்று எம்மை அழைத்தது...

அதையொட்டி இரண்டு
கட்டடங்கள் பள்ளிக்கூடம்போலும்..
நல்ல காற்று...
தரையைத்தட்டிப்படுத்துக்கொண்டோம்....

பள்ளிக்கூட வகுப்பறைகள் தான்
ஆனால்
மாணவர்களை விட ஆடுகள்தான்
அங்கே அதிகநேரசெலவிடும்போல
எங்கும் அவைபோட்ட புழுக்கைகள்...

அன்று நெடுநாள்க்கழித்து
துப்பாக்கிஓசையும்;
குண்டுவெடிச்சத்தமும் இல்லாத
ஒரு இரவை
களித்தோம் எனலாம்....

மனதுக்குள் ஏதோ ஏதோ
பழைய நினைவுகள்



9 நவம்பர் 90 காலை 7 மணி

அயர்ந்து போயிருந்த எம்மை
அதிகாலையில்
புழுனிகள் இசைபாடி
துயிலேழுப்பின...

இத்தனைநாள்தான்
துப்பாக்கிசத்தம்கேட்டும்
கண்விழித்தீர்கள்
இன்றாவது
இசைகேட்டுவிழித்தேழுங்கள்
என்று இரக்கம்போலும்...

இரவு நாம் அயர்ந்து தூங்கிய
இடம் ஒரு வகுப்பறைதான்...
ஆனால் வானம் திறந்த வகுப்பறை...
பெயருக்கு ஏதோ உடைந்த
ஓரிரண்டு ஓடுகள்மட்டும்சிலாகைகளில்
ஒட்டிக்கொண்டிருந்தன...

இரவில் எமக்கு
அடைக்கலந்தந்த
இரணை தீவை
இரசிக்க ஆசைகொண்டு
வெளியில் வந்தோம்...

அமைதியான மீனவத்தீவு

கிழக்கில்
கற்கள் மட்டும்போடப்பட்டு
முடிக்கப்படாத ஒருஇறங்குதுறை...
தமிழனுக்கு இதுபோதும் என்று
நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்....

அதையடுத்து
பரந்தநீலக்கடல்..
அதன் எல்லையில்
காக்கைதீவு எருமைத்தீவு
என இரண்டு தீவுகள்
அதற்கு அப்பால் வேறாவில் கிராமம்...
(மீனவ நன்பனிடம்
பிற்பாடு கேட்டுத்தெரிந்துகொண்டோம்)

மேற்கில் வறண்டுபோன
வடக்கு இரணை தீவின் நிலப்பரப்பு

அங்கு எதுவும் இல்லை....
எங்கும் முட்புதர்களும் கள்ளிச்செடிகளுந்தான்
இடையிடையே தலைநீட்டிய
முருகக்கற்கள்..
ஒரிரண்டு புூவரசு மரங்கள்...

தூரத்தில் ஓரிரண்டு
குடிசை வீடுகள்...
மனதில் மகிழ்ச்சி...
ஒரு நிம்மதி...
ஓ மனிதர்கள் வசிக்கிறார்கள்...
எம்மைத்தவிர வேறு
மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள்...
நாங்கள் இன்னும் தனித்துப்போய்விடவில்லை...
ஒரு பாதுகாப்பு உணர்வு...

தேவாலயம் முகப்பில்
கருணைபொங்கும் மாதாவின் திருஉருவம்....

பார்த்த உடன் மனதில்
உள்ள சஞ்சலங்கள் எல்லாம்
ஓடிவிட்டச்செய்யும் தெய்வீகம்...

தேவாலயத்தை ஒட்டி
விருந்தினர்விடுதி...

அப்பால் இரண்டுவீடுகள்....
ஒரு கூட்டுறவு சங்கக்கடை...

எதிரே கடற்கரையோரம்....
தேநீர்கடை சேர்ந்தற்போல்ஒருசைக்கிள் கடை...
இது தான் வடக்கு இரணை தீவு...


காலைக்கடன்கள் முடித்து
திறக்காத தேநீர்க்கடையின் வாசலில்
நெடுநேரம காத்திருந்தோம்.....

யாரும்திறப்பதாகத் தெரியவில்லை...

அருகில் இருந்த குடிசையில்
ஒரு வயதானவர்
எம் நிலைபார்த்து இரக்கம்கொண்டார்
விபரம் சொன்னார்

இரண்டுநாட்கள் முன்னால்
இரவு மீன் பிடிக்கவந்த இந்தியமீனவர்களை
இலங்கை விமானப்படை கெலி தாக்கியதாம்.....

காலையில்மீண்டும் வந்து
உள்ளுர்மீனவர்களையும்
தாக்கியிருக்கி அட்டூழியம் செய்ததாம்......

இதனால்
மீனவர்கள் பயந்துபோய்வெளியேவரவில்லை...
படகுச்சேவையும் நின்றுபோனது..
பலர் அக்கரையில்
மாட்டிக்கொண்டார்கள்...

ஏதோவேலையாகச்சென்ற
தேநீர்கடைக்காரரும்
மறுகரையில் மாட்டிக்கொண்டார்...

பேசிக்கொண்டு இருக்கும்போதே
கைகளில் தேநீர் குவளைகளுடன்
வெளியேவந்தார் அவர் மனைவி...

சுடச்சுட அவர்கள்
கொடுத்த கறுப்புத்தேனீர்
கடற்கரைக்குளிருக்கு
இதமாய்இருந்தது..

என் நாட்குறிப்பில்கிறுக்கியது

7



அன்று தூக்கம் தொலைந்தது

என் கண்களுக்குள்ளே
நீ பார்த்தபார்வை

ஏதோ அவை சொல்லவிளைந்தனவே?

உனக்குள்ளும் காதல்
ஊமையாய் இருக்கிறதோ?
நான் படும் வேதனைகள்
உன்னையும் வாட்டுகின்றதா...?




விடிந்தபோது என்விழியில் உன்விம்பம்
எங்கு நோக்கிலும் நீ
உன் பேச்சு.. உன் சிரிப்பு...

'எப்போது உன்முகம் பார்பேன்?'
கெஞ்சியது என்மனம்...

'நேற்றுத்தானே பார்த்தாய்
இன்றே எப்படி..?'

'எதைப்பற்றியும் கவலையில்லை...
உன்னைப்பார்க்கவேண்டும்'

எனக்குள்ளே சண்டை
மனதுக்கும் மனசாட்சிக்கும்..

மனசாட்சி தோற்றுப்போனது...

பல்விளக்கவில்லை...
முகம் கழுவவில்லை...
கலைந்த தலைவாரவில்லை..
கையில் கிடைத்த சேட்டைமாட்டி
வெளியேவந்துவிட்டேன

ஏழு மணிக்கு
நீ அரசடிவீதிக்கு படிக்கவருவாய்
பார்த்துவிடலாம்..
பார்த்தே ஆகவேண்டும்...

செய்தித்தாள் ஒன்றைவாங்கிக்கொண்டு
தபால்பெட்டி அருகில் நின்றுகொண்டேன்..

உன்தோழிகள் குளாம் சென்றது
நீ அதில் இல்லை....

என்னாயிற்று உனக்கு?..
எனமனது படபடத்தது....
கவலை வந்துஒட்டிக்கொண்டது..

வீடுவந்துவிட்டேன்

எதோ கேட்ட தம்பியிடம்
எரிந்துவீழுந்தேன்...

ஒருநாள்
இரண்டுநாள்
மூன்றுநாள்
நான்குநாள்
பொறுமை காத்தேன்

நாட்கள் எல்லாம்
வருடங்களானது எப்போது...
ஒவ்வொரு மணித்துளியும்
நரகத்தில் கழித்தேன்

ஒருவாறு என்வாழ்வில்
வெள்ளிவந்தது...

என்னைப்பார்ததுதான்
உன்விழியில் என்ன ஒளி
குழந்தைபோல் ஓடிவந்தாய்
என்னருகில்...

உன்கையை
இறுகப்பிடித்துக்கொண்டேன்
விட்டுவிட்டால்
என்னுயிர் போய்விடலாம்

கைகளுக்கூடே மின்சாரம்

இதயம்
மீண்டும்
இயங்கத்தொடங்கியது

"........ உன்னைப்பார்க்காமல்
ஒரு நொடி கூட
என்னால்இருக்கமுடியவில்லை...
உன்னோடுதான்
என்வாழ்வு அமையவேண்டும்..."

"ஏற்றுக்கொள்வாயா?"

நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்..
உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர்

ஏதோ சொல்லவந்தாய்
வார்த்தைகள்
வெளியேவரவில்லை

கனிவாகப்பார்த்தாய்
பின்
என் கைகளை எடுத்து
யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்..


உன் மனதில்
மகிழ்ச்சி
வெட்க்கம்
ஒராயிரம் உணர்ச்சிகள்
ஒன்றாய்...





அன்று
முடிவுசெய்தோம்
வாரத்தில் நான்கு தடவை
பாhப்பது என்று

அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும்
ஒரு புது ஜீவராசியாய் நான்
வலம் வந்தேன்

நூலகம்
கோவில்
இந்த இரண்டிலும் தான் எமது
சந்திப்புத்தொடாந்தது..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உணர்ச்சி




அன்று மீண்டும்
நாட்டில் வன்முறை வெடித்தது

இந்திய இராணுவம்
ஏற்படுத்திச்சென்ற
கறைகள் ஆறும் முன்பே
மீண்டும் ஒரு போர்

இலங்கை இராணுவத்தின்
அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது...


உன்னைப்பார்ப்பது
தடைப்பட்டுப்போனது

முதலுதவிப்படையினருடன்
நானும் இணைந்து
காயம்பட்ட சகோதரர்களை
பராமரிக்கும் பணியில்
ஈடுபட்டிருந்தேன்...

ஒருநாள் இரவு
கொஞ்சம் நேரம்கிடைத்தது
ஓடி வந்தேன்
எப்படியும்
பார்த்துவிடுவது என்று

உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள் ...




உன் வீடு
புூட்டிக்கிடந்தது....
நீஙகள்
இடம்பெயர்ந்துவிட்டதாக
சொன்னார்கள்
எங்கு சென்றாய் என்று
தெரியவில்லை...
மனம் நொடிந்து பொனது...

எதுவும்
செய்யப்பிடிக்கவில்லை
வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்...

நாட்கள் செல்லச்செல்ல
போர் வலுப்பெற்றது...
நாங்களும் இடம்பெயர்ந்தோம்

ஒருநாள் அப்பா
என்னையும்
என் தம்பியையும்
இந்தியாவிற்க்கு போக
ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார்

அம்மா போய்விடும்படி
கெஞ்சினாள்....

இந்தியா வந்து
என் படிப்பைத்தொடர்ந்தேன்

இலங்கையில்
இருந்த
இரண்டொரு நன்பர்களுக்கும்
உன்விபரம் தெரியவில்லை...

உன் முகவரிக்கு
நான் போட்ட
கடிதங்கள் எதுவும்
பதில்கொண்டுவரவில்லை...

இன்று நீ
எங்கே இருக்கின்றாயென்று
எனக்குத்தெரியாது...

பதின்மூன்றுவருடங்கள்
பறந்தோடிவிட்டன..

மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...

எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்...
அப்போழுதுதெல்லாம்
ஆண்டவனைவேண்டிக்கொள்வேன்
நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும்
என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும்


முற்றும்



என் நாட்குறிப்பில்கிறுக்கியது

6



என்றும் இல்லாது
எனக்குள் புதிதாய்
புத்துணர்ச்சி..
காதல் கொடுத்த
புத்துணர்ச்சி!!!!!

இரண்டு
இதயம் பெற்ற
புது வேகம்..

கவலைகள் என்று
நினைத்தது
எல்லாம்
கரைந்து போனது...

பறப்பது போல
ஒரு உணர்வு

வாழ்வில் பெரிது என்று
நினைத்தது
எல்லாம்
சிறிதாய் தெரிந்தது..

என்னால் முடியும்
என்னால் முடியும்
வாழ்வில் வெல்ல
என்னால் முடியும்..

நம்பிக்கை பிறந்தது..
காதல் கொடுத்த நம்பிக்கை..

நீ என் கூட வந்தால்
எதுவும் முடியும்



புது உத்வேகத்துடன்
எழுந்தேன்..

அன்று முழுவதும்
இன்பமாய் களிந்தது

இரவானதும் மீண்டும் ஏதோ
என்னை வாட்ட ஆரம்பித்தது...

என்னதான் நீ பேசினாலும்
இன்னும்
நான் காதல் சொல்லவில்லையே
என் இதயம் காட்டவில்லையே..

என்னை நீ
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ..
ஏக்கமாய் இருந்தது...

தூக்கம் கொஞ்சம்
தொலைந்தது..

தூக்கம் வேண்டி
புத்தகத்தில்
கண்பரப்பினேன்..

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

இந்தவரிகள்
ஏதோ எனக்கு
எடுத்துச்சொன்னது....

மீண்டும் மீண்டும்
படித்தேன்.

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

என் தினக்குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொண்டேன்...

வாழ
கற்றுக்கொள்வோம்
கூடவே
காதலும் செய்வோம்...

தீர்மானித்துக்கொண்டேன்...




மூன்று நாட்கள்
உன்னைப்பார்க்கவில்லை.
எனக்கு நானே
விலங்கிட்டுக்கொண்டேன்.

கொஞ்சம் வெற்றிதான்

உள்மனம் மட்டும்
உன்னைப்பார்க்கவேண்டும்
என்று அடிக்கடி விண்ணப்பிக்கும்

என் மனசாட்சியிடம் இருந்து
தொடர்ந்து
நிராகரிப்புத்தான்

ஒருநாள் அது
கோபங்கொண்டு
"உனக்கு மனசாட்சியே
இல்லையா" என்று
கண்ணீர்விட்டது

'சரி '
கொஞ்சம்
உருகியது மனசாட்சி

சைக்கிளை எடுத்துக்கொண்டு
மீண்டும் உன்வீட்டருகில்
வலம் வந்தேன்
உன் தரிசனம் கிடைக்கவில்லை...

"நேரம் ஆகிவிட்டது"
என் மனசாட்சி நச்சரித்தது
திரும்பி விட்டேன்...

பெரிதாக ஏதோ கட்டுப்பாடுகள்
விதித்துக்கொண்டேன் என்ற
பெயர்தான்
உள்ளே எப்பொதும்
உன் நினைவுதான்

படிப்பில் என்மனம் செல்லவில்லை.

பார்க்கும்
பெண்கள் எல்லாம்
நீயாக தெரிந்தார்கள்
ஒடிச்சென்று
முகம் பார்த்தால்
அது யாரோ என்று
உறைத்தது...

வெள்ளிக்கிழமைவரை
நான் மூச்சைப்பிடித்துக்கொண்டேன்...

இதுவரை
எந்த ஒரு நாளையும்
இந்த அளவு
எதிர்பார்த்து
ஏங்கித்தவித்ததுகிடையாது

இந்த வெள்ளிக்கிழமைக்காக
கழியும் ஒவ்வொரு
நொடிகளை எண்ணிக்கொண்டேன்..

உன்பார்வவைக்காக
என் மனம்
கெஞ்சி அழுதது...

இதோ வெள்ளிக்கிழமைவந்துவிடும்
நானே என்னைத்
தேற்றிக்கொண்டேன்..

பாதியிலேயே
என் மனசாட்சிபோட்ட
தீர்மானம் எல்லாம்
காற்றில் பறந்தது...

வியாழன் மாலையில் நீவரும் பாதையில்
காத்திருந்தேன்...



நேரம் ஆகிக்கொண்டே இருந்தது
இருள் சூழஆரம்பித்துவிட்டது..

தெருவில்
ஆட்கள் நடமாட்டம்
கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்துவிட்டது..

போகும் ஓரிரண்டு பேரும்
என்னை கேள்வியோடுபார்த்தார்கள்...

இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது?...

நீ வருவாய்என்றால்
காத்திருப்பது ஒன்றும்
கஸ்டமில்லை

தூரத்தில் இரண்டுபிள்ளைகள்
சைக்கிளில் வருவது
தெரிந்தது.... அதில் ஒன்று நீதான்
உள்மனம் சொன்னது...

வலது புறம் வந்த பிள்ளை
இடதுபுறம் இருந்த குறுகிய ஒழுங்கையில்
சென்றுவிட

நீ மட்டும் நேராய் வந்தாய்..

".............." உன்பெயர்சொல்லி அழைத்தேன்....

தினமும் உன் பெயரை மனதுக்குள் மட்டும்
உச்சரித்துபழகியிருந்தேன்...
இன்றுதான் வாய்ப்புவாய்த்து
உன் பெயர்சொல்லி அழைக்க

உன் பெயர்கேட்டு திடுக்கிட்டுவிட்டாய்.
வெடவெடத்துப்போய் நின்றுவிட்டாய்...

"நான்தான் ..............."

"ஐயோ என்ன செய்யுறீங்கள் இங்கே" கோபம் தெறித்தது வார்த்தைகளில்.

உனக்கில்லாத உரிமையா?

"உங்களைப்பார்க்கத்தான் வந்தன்"

"ஐயோ என்னால இங்கு நின்று கதைக்க முடியாது. கோயிலுக்குத்தானே வரச்சொன்னனான்"

"மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..................... "

"சரி நேரம் போச்சு நான் போறன். அம்மா ஏசுவா"
ஆனாலும் நீ அங்கு தான் நின்றிருந்தாய்.
நான் விடைகொடுக்க காத்திருந்தாய்

"போகிறேன் என்று சொல்லாதுங்கோ
பொயிற்றுவாறன் என்று சொல்லுங்கோ"
விடைகொடுத்தேன்...

நீ புன்னகைப்பது தெரிந்தது.

விடைபெற்றுக்கொண்டாய்.

அன்று கொஞ்சம் நிம்மதி
கொஞ்சம் சுவாசித்துக்கொண்டேன்


இரவுகள் என்னைக்
கொஞ்சம் மன்னித்துவிட்டன..

காலையில் மீண்டும்
புது வேகம்...
மனசெல்லாம் குதூகளிப்பு..

அடிக்கடி நேரம் பார்த்து
ஏற்றாற்போல் இயங்கிக்கொண்டிருந்தேன்...

எட்டு மணிக்கு அங்குஇருந்தாக வேண்டும்
ஏழு இருபதிற்கே வீட்டிலிருந்து
புறப்பட வேண்டும்...
எனக்குள் நேர அட்டவணை
ஏற்கனவே தயாராகிவிட்டது....

யாரும் இடையில்
புகுந்து குழப்பம் செய்துவிடக்கூடாது...
இடையிடையே முருகனை
துணைக்கு அழைத்தேன்...

அம்மாவுக்கு ஏதோ சந்தேகம்...
விசித்திரமாகப்பார்த்தாள்.
என்றுமில்லாது
நான் சைக்கிளைத்
துடைத்தது கண்டு
புன்னகை செய்தாள்...

"வெள்ளிக்கிழமை விடிந்தால்போதும்
உனக்கு பக்தி..."
ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்திக்கொண்டாள்....

அவள் போகும் வாரை காத்திருந்து
கண்ணாடிபார்த்து
தலைவாரிக்கொண்டேன்...

இருக்கின்ற சேட்களில்
எனக்குப்பிடித்தஒன்றைப்
போட்டுக்கொண்டு...

தெருவில் இறங்கினேன்..

என்னை
எதுவும் கேட்காமலே
என் சைக்கிள் உன் வீட்டுத்தெருவில்
பயணித்தது...

தூரத்தில்
கோவில்மேற்கு வீதியில்
நீ சென்றுகொண்டிருந்தாய்..

உனக்குமுன்பாக வந்து
கற்புூரம் விற்கும் பாட்டியருகில்
காத்திருந்தேன்...

நீ சிறிதாக புன்னகை செய்தாய்
என்னைக்கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தில் தெரிந்தது...
ஆனால் எதுவும் பேசவில்லை...
அதுதான் கண்கள்பேசுகின்றனவே என்று நினைத்திருப்பாயோ?

கொஞ்சம்
இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தேன்...

நீ கண்களை மூடி
பிரார்த்திக்கும் போதுமட்டும்
நான் உன் முன்வந்து
உன்னை பிரார்த்தித்துக்கொள்வேன்.....
எதுவும் தெரியாததுபோல் நீ வந்தாலும்
உனக்குள் கொஞ்சம் கோபம்
உன்முகத்தில் தெரிந்தது....

வைரவர்கோயில் வாசலில்
நான்
உன்னைப்பார்த்துப் பிரார்த்தித்தபோது
நீ கோபங்கொண்டு...
கையில் இருந்த செம்பருத்திப்புூவை
என் முகத்தில் வீசியடித்தாய்..

அன்றுதான்
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்..

நீயும் கொஞ்சம் நெருங்கிவிட்டாய்
இல்லையேல் எப்படி கோபம் வரும்..

படிக்கட்டு வந்தும் நீ மௌனம்விரதம்

"ஏன் பேசக்கூடாதா?"

"என்ன பேசவேண்டும் நான்?"
வேண்டுமென்றே
கேள்விகேட்டு என்னை வம்புக்கழைத்தாய்....

"நிறைய இருக்கிறது. எங்கள்...
இல்லை இல்லை உஙகளது எதிர்காலம்
என்னுடைய எதிர்காலம்..."

"என்ன எதிர்காலம்"
விதண்டாவாதம் பண்ணினாய்

"சரி கொஞ்சம் சிரியுங்கள் சந்தோசமாக இருக்கலாம்"
சமாதானத்திற்கு அழைத்தேன்...

வாயைக்கோணலாக்கி சிரித்தாய்...

"உங்கள் ஊர் வவுனியாதானே"
சிரித்தபடி சொன்னேன்

"அப்படியெனடா நீங்கள் மாங்குளமா?"
நீயும் சிரித்தபடிகேட்டாய்

"பொல்லாத வாய்க்காறி"
மனதுக்குள் சொன்னது
உனக்கு
கேட்டுவிட்டது

கோபத்தில் மறுபக்கம் திரும்பிக்கொண்டாய்

எத்தனை தடவை உன் பெயர் சொல்லியும்
நீ திரும்பவே இல்லை

"கோபமா"

உன்னிடத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

" மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..............."
கைகளை இறுகப்பற்றிகெஞ்சினேன்

அன்றுதான் முதல் முதல் உன்கைபிடித்தேன்.
சில்லென்றுவாழைத்தண்டுபோல.
மென்மையான அந்தக் கைகளை
இறுக
ஆனால்
உனக்கு வலிக்காது பிடித்துக்கொண்டேன்.

ஒரு கையால் உன் கன்னம் தொட்டுதிருப்பினேன்

உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்

உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்

"ஏன் அழுகிறீங்கள்?"

நீ பதில் சொல்லவில்லை..

ஆனால் நான் உணர்ந்தேன்.
பெண்கள் மனது என்பது
மலர்களைப்போல.
மென்மை.. மென்மை.. மென்மை..

உணர்ச்சிகள் அங்கு அமைதியாக
உறங்கிக்கொண்டு இருக்கும்

சின்னதாய் ஒரு கல்லும்
அலையை ஏற்படுத்துவதுபோன்று
சின்ன சம்பவம்கூட
அவர்கள் அமைதியைக்குலைத்துவிடும்

கவலையா மகிழ்ச்சியா கண்ணீர்தான்
அவர்கள் வெளிப்பாடு...

உன் பூமனதை இனி
புண்செய்வதில்லை
முடிவு செய்துகொண்டேன்

இரண்டு நிமிடம்தான்
நீயே கண்ணீரைத்துடைத்து

என்னை ஏறிட்டாய்....

உன் கண்களில்
ஏதோ ஏதோ
வார்த்தைகள்
புதைந்து கிடந்தது..

பார்வைகளுக்கென்றே
ஒரு அகராதி
இருந்திருந்தால்
என்ன சொல்ல விளைகிறாய்
அறிந்திருப்பேன்...

புன்னுறுவல் செய்தாய்...

இப்போது கண்ணீர் விட்டகண்களில்
சின்னதாய்ப் பிரகாசம்..

ஆவலாக எதையோ
கைப்பையிலிருந்துவெளி எடுத்தாய்
பிரித்தபோது அதில்
இரண்டு லட்டுக்கள்

எத்தனை அன்பு உனக்கு
என் அன்னையின் அன்பை
உன்னிடம் கண்டேன்

Saturday, October 30, 2004

என் நாட்குறிப்பில்கிறுக்கியது

5



வெள்ளை நிறச்சுடிதாரும்
ஊதா நிறத் துப்பட்டாவும்
உன்னழகில் மேருகு பெற்றிருந்தன...
இன்னும் காயாது ஈரமாய் உன்கூந்தல்..
அதில்
மல்லிகைப்புூக்கள் பேறு பெற்றிருந்தன..

ஒரு நொடி
நான் உன்னைப்பார்க்க
நீ என்னைப்பார்க்க
கண்ணுக்குள் மின்னல் பாய்ந்தது

உன் கண்களின் பிரகாசம்
என்னை தலைகுனிய வைத்தது

ஆனாலும் என்மனம் இன்னும்
ஒரு தடவை அந்தப்பார்வை வேண்டுமென்று
அடம்பிடித்தது
மீண்டும் பார்த்தபோது நீயும்
தலைகுனிந்திருந்தாய்..

என்னை அங்கு எதிர்பார்த்திராததால்
எற்பட்ட உணர்ச்சிகள் உன்முகத்தில்

என் படபடப்பு
உன்னையும் தொற்றிக்கொண்டதோ?

நீ தலைநிமிர
மீண்டும் அதே மின்னல்...
குனிந்துகொண்டேன்

நீயும் நானும் மட்டும்
இப்போது தண்ணீர்குழாயருகில்
மூடி இருந்த குழாயை திறந்து
உனக்காக வழிவிட்டேன்...

நீர் உன்பாதங்களில் பரவி
வழிந்தோடியது...

நானும் கழுவி நிமிர்ந்தபோது
நீ நடந்துகொண்டிருந்தாய்...

நீ சென்ற பாதையில் ஈரமாக
காலடிகள்..
வேகமாகப்பின்பற்றினேன்

.........................................................


எதிரேபழைய நன்பன் வர
கொஞ்சம் நின்று பேசினேன்....

நீ
கூட்டத்தில் கலந்துவிட்டாய்...

அர்ச்சனை முடித்து
ஆறுதடவை சுற்றிவந்தும்
உன்னை எங்கும் காணவில்லை....

தீர்த்தக்கேணியருகில் வந்துபோது

படிக்கட்டில் நீதான்..
அமைதியாக அமர்ந்திருந்தாய்...
சின்னக்குழந்தையாக
மீன்களுக்கு பொரியிட்டு
வேடிக்கை
பார்த்திருந்தாய்...

நான் அருகில் வரவும்
உன் விழிமீனில் கேள்விக்குறி...

அவசரமாய் எழுந்துவிட்டாய்

....................................


"கொஞ்சம் பேசவேண்டும்"
கெஞ்சினேன்...

உனக்கும் எனக்கும் ஒரே படபடப்பு
வார்த்தைகள் உனக்குள்ளும்
காணாமல்ப்போயிருக்கவேண்டும்

அமர்ந்துகொண்டாய் ஆனாலும்
அமைதி...

மூன்று நிமிடம்
அதே அமைதி..
காற்றின் ஓசை மட்டுந்தான்

நான் வார்த்தை அடைத்து
மீண்டும் ஊமையாகிப்போயிருந்தேன்...

நீ தான் மௌனத்தைக்கலைத்து...

"என்ன?"

கேள்வி எழுப்பினாய்..
அதில் என்மேல்
உனக்கிருந்த இரக்கம்
கொஞ்சம் வெளித்தெரிந்தது...

அது எனக்கு
உயிர்தந்தது...

என்னுள் சுவாசம் மீண்டும்
ஆரம்பித்தது...

நின்றுபோயிருந்த இதயம்
உயிர்பெற்றது

..........................................


"ஒன்றுமில்லை சும்மாதான்
எப்படி இருக்கிறீர்கள்"
முட்டாள்தனமாய்கேட்டுவைத்தேன்...

மௌனமாக சிரித்தாய்..
ஆனால் கேலியோ கிண்டலோ
இம்மியளவும் இல்லை

"நான் போகவேண்டும் .............."

என் பெயரை இரண்டாவது
தடவை உச்சரித்திருக்கிறாய்...

உன் பெயரை
இருபதாயிரம் தடவை
நான் செபித்ததின்
பலன் தானோ?

"இருங்கள் ஒரு நிமிசம்"
நான் கெஞ்சினேன்...

இரக்கங்கொண்டாய் என்மேல்...

நீயாகவே பேசினாய்
"இப்போது என்ன படிக்கிறீர்கள்?"
"ஏன் விஞ்ஞானம் எடுக்கவில்லை?'
"கணக்கியல் யாரிடம் கற்கிறீர்கள்?"

பின் ஏதேதோ கேட்டாய்
இடையிடையே
உன்னைப்பற்றியும்கூட சொன்னாய்..

பேசிக்கொண்டேஇருந்தோம்...
ஒவ்வொரு நிமிடங்களும்
சொர்க்கத்தில் களிந்தது...

திடீரென நேரம் பார்த்ததுதான்
படபடப்பானாய்
"நேரமாகிவிட்டதுபோகவேண்டும்"

"இன்னும் ஒரு நிமிடம்"
நான் கெஞ்சினேன்..

"வேறொரு நாள் பார்க்கலாம்.
நேரமாகிவிட்டது"

"எப்போது?"

"அடுத்தவெள்ளி"

நீயாகவே நாள் குறித்தாய்
என் இரண்டாவது
சொர்க்கத்திற்கு..

நன்றிகள் கோடி உனக்கு

...................................................

நீ விடைபெற்றுச்செல்ல
என்னுள் ஏதோ உன்னுடன் சென்றது...

உன் மல்லிகை வாசம் இன்னும்
அங்கேயே என்னைச்சுற்றி..

சன்னிதியைக்கடக்கும் முன்
ஒரு தடவை திரும்பிப்பார்த்து
கையசைத்தாய்...

நான் நன்றியோடு எழுந்த நின்றேன்...

நீ என் பார்வையில்
மறைந்ததுதான் அடுத்தநொடியே
சொர்க்கத்தில் இருந்த நான்
பூமிக்கு தள்ளிவிடப்பட்டேன்....

பழையபடி கோவில் மணியும்
மேளதாளங்களும் காதில் ஒலித்தன...

மீண்டும் அமர்ந்துகொண்டேன்..

நீ அமர்ந்த படிக்கட்டை
பாசத்துடன் பார்த்தேன்..

மல்லிகைப்புூ ஒன்று..

உன் கூந்தலில் இருந்துதான்
வீழ்ந்திருக்க வேண்டும்..

கொடுத்துவைத்த புூ
பொறாமை கொண்டேன்
அந்தச்சின்னப்புூவிடம் கூட

என்னுடனேயே வந்துவிடு
எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்

என் சட்டைப்பையில் அதை
பத்திரப்படுத்திக்கொண்டேன்..


Friday, October 29, 2004

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

4



நான் கனவில் அலறி
உன் பெயர் சொன்னது
அம்மாவின் காதுகளிலும்
விழுந்து விட்டிருக்க வேண்டும்
அன்புடன் பதை பதைத்து ஓடிவந்து
அருகே அணைத்து நின்றாள்

என்ன? ஏது? என்று கேட்டாள்
கனவு என்றதும்..
மௌனமாகிப்போனாள்
எதுவும் கேட்கவில்லை
ஆனால் மனதுக்குள்
கவலைகொண்டிருப்பாள்

என் வயதே அவளுக்கு
என் கதை சொல்லியிருக்கும்



தூக்கம் கலைந்தது
ஆனால்
துக்கம் மனதில் கசிந்தது

இரவில் சிந்தித்தது
மீண்டும் என்னை
இறுகப்பிடித்துக்கொண்டது..

எப்படி முடியும்...
ஒரு நாள்
பார்க்காவிட்டாலே
என் சுவாசமே நின்று போகிறது.
நீயில்லாத என்வாழ்வை
நினைத்துப்பார்க்;க முடியுமா?..

சொல்லாத காதலெல்லாம்
சொர்க்கத்தின் வாசல் வரைதானாம்

என் மௌனமே
எனக்கு எதிரியாகிவிடுமோ...




சொல்லிவிடலாமா ?
இல்லை சொல்லாமல்
கனவுடன் காத்திருக்கலாமா?..

சொல்லாத காதல்
நகராத தேர்போல
எங்கும் போய்ச்சேராது...

சரியான நேரத்தில்
சரியான முடிவு எடுக்கவேண்டும்
இல்லையேல்
வாழ்வே திசைமாறிப்போய்விடலாம்...

காதல் என்ற
ஒருவழிப்பாதையில்
யாரும் தானாக நுழைவதில்லை.
அதுதான்
எம்மை உள்வாங்கிக்கொள்ளும்.

உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.

ஏங்கே போய்முடியும்
போய்த்தான் பார்க்க வேண்டும்
அது
சொர்க்கத்திலும் சேரலாம்
சோகத்திலும் சேரலாம்..

ஆனால்
நடந்து தான் ஆகவேண்டும்
எல்லை வரை...

ஒவ்வொரு அடியும்
உறுதியாக இருக்கவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்

சும்மா
இருந்தால்
சோகம் முடிவாகிவிடும்

தூக்குத்தண்டனையேயானாலும்
உடனே கிடைத்தால்
வெதனை கொஞ்சம் தான்

காத்திருந்து சாவது
ஒவ்வொரு நாளும் சாவுதான்

சொல்லிவிட்டால்
விடை கிடைத்துவிடும்
விதியை அறிந்து கொள்ளலாம்



ஏதோ ஒரு தைரியம்
காதல் கொடுத்த தைரியம்
எதைப்பற்றியும் கவலைப்படவில்லை...
வேகமாய் தாயாராகிவிட்டேன்

அம்மாவிற்கு ஆச்சரியம்
என் வேகம் பார்த்து
கேள்விகளோடு என்னை நோக்கினாள்

"ஒன்றும் இல்லை
கோயிலுக்குத்தான்
என் நன்பன் கூப்பிட்டிருந்தான்"
எனக்கூறி விடைபெற்றேன்
சாப்பிடவில்லை..
ஏற்கனவே நேரமாகிவிட்டது
நல்ல காலம் அம்மா வற்புறுத்தவில்லை..
ஆண்டவனைத்தரிசிக்க சாப்பிடாது சென்றால் தான்
பக்தி இருக்குமாம்...
அவள் நம்பிக்கை
என்னைக் காப்பாற்றியது...

சைக்கிளை வேகமாக மிதித்தேன்
எப்படியும் நீ நடந்துதான் போவாய்
உனக்கு முன்னால் நானங்கு இருந்தால் நல்லது
வழியில் உன்னைக்காணவில்லை....
நீ ஏற்கனவே சென்றுவிட்டிருப்பாயோ?...
அல்லது
வராமல்விட்டிருப்பாயோ?

வழக்கமாய் நீ செருப்பு வைக்கும்
கற்புூரப்பாட்டியிடமே
நானும் செருப்புவைத்தேன்...
உன்செருப்பு அங்கில்லை
ஒரளவு உறுதி..

தேங்காய் பழம் புூ வைத்த
அர்ச்சனைத்தட்டை நீட்டினாள் கற்புூரப்பாட்டி
வாங்கிக்கொண்டு கால் கழுவுமிடம் சென்றேன்

அருகே
கற்புூரம் வாங்கிக்கொள்ளச்சொல்லி
சிறுமி ஒருத்தி
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு ருபாய் கொடுத்து ஒன்றைமட்டும் வாங்கிக்கொண்டு
திரும்பியபோதுதான் அந்த
இன்ப அதிர்ச்சி!

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

3



காதல் விதையை
எப்படி விதைத்தாயடி என்னுள்?..

ஒரேயொரு பார்வைபார்த்ததில்
காதல் வந்திடுமோ?....

உன் அழகு என்னை ஒன்றும் செய்ததில்லையே?..

எனக்கும் உனக்கும் முன்ஜென்ம உறவோ?....
முட்டாள்தனம் இல்லையா இது?

எதற்காக வந்தது காதல்?
விடையே கிடைக்கவில்லை?




அது வானவெளி.....
அங்கே நீயும் நானும்தான்
கைகோர்த்து நடக்கிறோம்..
மனதெல்லாம் மகிழ்ச்சி
வெள்ளை மேகங்களில்
துள்ளிக்குதித்து விளையாடுகிறோம்..
இதுதான் சொர்க்கமாம்...

நீ அருகில் இருந்தால்
என் வாழ்வே சொர்க்கம்தானே...

ஓடி ஓடி
மின்னும்வெள்ளிகளைச்சேர்த்து
உன்தலையில் புூவாய் சூட்டுகிறேன்
ஐயோ கால்தவறிவிட்டதே..

கீழே அதளபாதளம்..

ஐயோ என்"..........."
உன் பெயரை உச்சரித்தபடி
கால்களை விசிறி அடிக்கிறேன்...
அட ஓலைப்பாயில் தான் படுத்திருக்கிறேன்...

அருகில் நீ இல்லை...

கனவுதான்....
எதையோ இழந்த உணர்வு....




காதல் ஒரு உன்னத உணர்வு..
அந்த உணர்வு
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
ஏன் ஒவ்வொரு ஜீவராசிகளிலும்
ஆண்டவன் விதைத்துவிட்டிருக்கிறான்...

காதல் இல்லை சாதல்
என்று பாரதியே
உனக்;கும் எனக்கும்
அறிவுரை சொல்லி
சென்றிருக்கிறான்....

காதல் தானாக வரவேண்டும்
வராத காதலை
வரவைக்கவேண்டாம்
அது வேதனைகளைத்தான்
வாங்கிவரும்..

காதல் உனது வாழ்விற்கு
ஒரு உந்து சக்தி..
ஒரு பிடிப்பு...
அது நிச்சயம்
உன்னை வெற்றிக்;கு எடுத்துச்செல்லும்...

ஆனால்
காதல் வந்தது என்று
கண்மூடி
கனவில் வாழ்ந்துவிடாதே...
மயக்கத்தில் உறங்கிவிடாதே...
உன்வாழ்வில் வெற்றிக்கு வேண்டிய
அத்தனையையும் நீ தொடர்ந்து செய்..
காதல் உன் கூடவந்தால்
நீ முள்ளில் நடந்தாலும்
வலிகளே இருக்காது...

இன்றைய வாழ்வு
வேகமான வாழ்வுதான்...
இல்லை என்று சொல்லவில்லை.
இதயங்கள் தானே
இன்னும்
உனனை
இயங்கவைக்கின்றன...

காதல் என்று வந்துவிட்டால்
உறுதியாக நில்
பாதியிலே காணாமல் போய்விடாதே..
வெற்றி என்றும் உனக்குத்தான்..

காதல் என்றும் தோற்றது இல்லை..
மனிதன்தான்
அடிக்கடி
தோற்றுப்போகிறான்....

காதல்
என்றபோர்வையில்
யாரையும்
வற்புறுத்த நினைக்காதே...
பின்னால் சென்றுவருவது காதலல்ல..
அந்த உறுவுக்கு வேறு பெயர்...
அந்த வார்த்தையை நானே
தணிககை செய்கின்றேன்

காதல் தோற்றுவிட்டுது
என்றால் உன்;வாழ்வே
இருண்டுவிட்டாதாய்
எண்ணிவிடாதே....
நீ பேகும் பாதை
எப்போதும்
தெளிவாகத்தான்
இருக்கிறது...

நீ நீயாக்கத்தான்
எப்போதும் இருக்கிறாய்...
காதல் ஒரு உணர்வுதான்...
அதற்காக உன்னை
நீ அழித்துக்கொள்ளாதே..
வாழ்வைத்தொடர்

உறவுக்கள் நிறைய உனக்காக
காத்திருக்கிறது...
அங்கே உனக்காக ஒருத்தி
இருக்கத்தான் போகிறாள்....

காதல் செய் காதல் செய்...

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

2



உன்னுடன் பேச வேண்டும் என்பதற்காக
இரவெல்லாம் வரிகளை தேடி வைப்பேன்..
உன்னைக்கண்டதும் வார்த்தைகள் எல்லாம்
ஓடி ஒழிந்து கொள்ளும்
ஊமையாகி திக்கித்திணறுவேன்

ஆனால் உன்பார்வை
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பேசும்
குறும்பாக எதேதோ என்னிடம் கேள்விகள் கேட்கும்
எதற்கும் என்னிடம் பதில் வந்ததில்லை...
நான்தான் ஊமையாகிவிட்டிருப்பேனே......



உன்பிறந்ததினம் இன்னும் நினைவிருக்கிறது.....
அன்று கோவிலில் உனைப்பார்த்தேன்
வெளிர் நீல நிறத்தில் ஆடையணிந்து
சன்னிதியில் கண்மூடிநின்றிருந்தாய்...
நீயே ஒரு தெய்வமாக எனக்குத்தெரிகிறாய்
நீ என்ன அந்தத்தெய்வத்திடம் வேண்டிக்கொள்வாய்
புதிராக இருந்தது எனக்கு.



நன்பர்கள் எல்லாம் என்னைக்கேலியாகப் பார்த்தார்கள்.
நான் துணிவே இல்லாதவனாம்....
இனியும் காதலை மறைத்துவைப்பது பாவமாம்
ஏதேதோ பேசிவிட்டார்கள்.....
எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்..
யார் சொன்னது நான் பேசவில்லை என்று
நான் எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருப்பது
அவர்களுக்கு எப்படித்தெரியும்....



வெள்ளிக்கிழமை
என் காதலை சொல்லிவிட முடிவு செய்தேன்

வியாழன் இரவே படபடப்பு ஆரம்பித்துவிட்டது..
சாப்பிடப்பிடிக்கவில்லை...

பதினோராயிரம் தடவை எப்படிப்பேசுவது என்று
பேசிப்பார்த்துக்கொண்டேன்......

இதயம் ஏனோ வேகமாக அடித்தது......
உடலின் வெப்பம் கொஞ்சம் ஏறிவிட்டிருந்தது...
இத்தனை நாள் உன் நினைவுகளுடன்
சுகமாகத்தூங்கியவன்

ஏன் அன்று மட்டும்
தூக்கமே தொலைந்து போனது?....
அடி மனதில் ஏதோ அரித்தெடுத்தது...

எங்கே நீ என் காதலை நிராகரித்துவிடுவாயோ
என்ற அச்சம்.

விடிய விடிய
என் மனதுக்ககுள்ளே
ஓராயிரம் போராட்டங்கள்..

ஒரே அவஸ்தை...

நான் படும் அவஸ்தைகள்
நீயும் அனுபவிக்க வேண்டுமா?

காதல் என்றால் அவஸ்தைகள் தானோ?

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

1




நீ இன்று எங்கிருக்கிறாயோ தெரியாது
ஆனாலும்
என் இதயத்தில்
இன்னும் இருக்கிறாய்

பள்ளி செல்லும் நாட்களில்
நீ பார்த்துவிட்டு பாராததுபோல்
செல்வாய்...

அப்போதே எனக்கு காதல் என்று சொல்லலாம்..

ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
இன்றும் நான் குனிந்து நிமிர வலிக்கிறது..
அந்த வலியுடன் உன்நினைவும் சேர்ந்திருக்கிறது..




டீயுூசனில் நீ என்றும் முதல் வரிசையில்
நான் என்றும் இரண்டு வரிசை பின்னால்த்தான்..
பதில் தெரியாமல் நான் பரிதாபமாய்
எழுந்து நிற்பதை நீ பார்த்துவிடக்ககூடதே என்று..
ஆனாலும் நீ கெட்டிக்காரி
ஆசிரியர் என்னிடம் கேள்வி கேட்கவும்
சொல்லிவைத்தது போல் திரும்பிவிடுவாய்....
உன்முகம் பார்த்ததும் எல்லாமே மறந்துவிடும்
தலையைக்குனிந்து கொண்டு நான்நிற்பேன்..
ஆசிரியரின் வசைமட்டும் காதில் கேட்கும்

அதன்பிறகு கொஞ்சம் பிரிவு...




கோயில் திருவிழாவில்தான்
பின் அடிக்கடி பார்த்துக்கொண்டோம்
அப்போது தான் காதல்
உன்பக்கமும் இருந்தது தெரிந்தது.....

அன்று சாமி ஊர்வலத்துடன் நானும் கூட வந்தேன்....
உன் வீட்டு வாசல் வரவும் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டேன்
நான் வருவேன் என்று எதிர்பார்த்திருந்திருபந்தாய் நீ..

தீவெட்டி வெளிச்சத்தில் உன் கண்கள் என்னைத்தேடியதும்...
காணாமல் கண்கலங்கியதும்..
என் அடிமனசில்; அப்படியே உள்ளது.



ஒரு நாள் நீ சைக்கிளில் வந்துகொண்டிருந்தாய்
காற்றில் உன் தொப்பி பறந்து கீழே விழுந்துவிட்டது
நான் ஏதோ பொது சேவகன் போல ஓடிவந்து எடுத்துக்கொடுத்தேன்
நீ என் பெயர் சொல்லி நன்றி சொன்னாய்.......
எத்தனை காலம் நான் ஏங்கியிருக்கிறேன்
நீ என் பெயர் சொல்லிக்கேட்க...
என் பெயரே அன்று தான் பேறுபெற்றது....




அன்றிலிருந்து தினமும் உன்னைப்பார்க்கவேண்டும்....
ஒரு நாள் பாராவிட்டால் பைத்தியம் ஆனேன் நான்
மேற்கில் இருக்கின்ற நன்பன் வீடு செல்வதற்கும்
கிழக்கில் இருக்கும் உன்வீடு கடந்து பயணிப்பேன்
சுற்றிச்சுற்றி அங்குதான் நான் எப்பொழுதும்....
ஆனாலும் உன்வீட்டுப்பக்கம் திரும்பிப்பார்த்ததில்லை...
நீ வாசலில் நின்றாலும் பார்த்துவிட்டு
நான் பாராதது போல செல்ல முயற்சிப்பேன்
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.....
நீ புன்னுறுவல் மட்டும் செய்வாய்...


புூவாக நான் பிறந்திருந்தால்
உன் கூந்தல் ஏறி
வாழ்ந்திருப்பேன்...

காற்றாக நான் பிறந்திருந்தால்
உன் சுவாசத்தோடு கலந்திருப்பேன்

........................


நான் சுவாசிப்பதே
உன் சுவாசங்களை உள் வாங்கத்தான்

........................


உன் அருகில் நான் இருந்தால்

என் வாழ்வெல்லாம்
வசந்தம்.....


........................



எப்போதும் நீ வேண்டும்..........

......................

உன் மூச்சாக நான் இருக்கமுடியும் என்றால்
இப்பொழுதே நான் தயார்
என் உயிரைவிட...

......................

என் இதயம் ஓவ்வொரு தடவையும்
துடிக்கும் போதும்
உன் பெயரைத்தானே அழைக்கிறது...


.......................


இத்தனை காலம் தேடினேன்
இதுவரை என் கண்ணில் படாமல்
எங்கிருந்தாய்....

புூவுக்குள் புூவாக
மறைந்து இருந்தாயா?
இல்லை
வானத்து நட்சத்திரமாக வாழ்ந்திருந்தாயா?

........................


என் இதயத்திலே
கோவில் ஒன்று கட்டிவைத்தேன்

தெய்வமாக நீ வந்தாய்

தினமும் அங்கு திருவிழா

உன்பெயர் தான் நான் சொல்லும் மந்திரங்கள்

.........................

உன் நினைவுகள்
என்றும் வசந்தம்...

........................

என்
ஆயுள்
ஒருநாளில் முடிந்து போனாலும்
கவலையில்லை
உன் நெற்றியில்
ஒரே ஒரு நாள் பொட்டாக
ஒட்டிக்கொள்ள
அனுமதி தருவாயா?

......................


உன் கால் கொலுசிலிருந்து வீழ்ந்த
ஒரு வெள்ளி மணி
என்; பொக்கிசமான கதை
உனக்குத்தெரியுமா?


......................

உன் கூந்தல்விட்டு உதிர்நத
புூக்கள் எல்லாம்

என் பாடப்புத்தகத்தில் பத்திரமாக....


......................



புூவாக நான் பிறந்திருந்தால்
உன் கூந்தல் ஏறி
வாழ்ந்திருப்பேன்...

காற்றாக நான் பிறந்திருந்தால்
உன் சுவாசத்தோடு கலந்திருப்பேன்

உன் உறவுகிடைத்தபிறகு தான்
நானும் கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பதாய் உணர்கிறேன்...

என்னை இந்த ஜென்மத்திலேயே
ஏற்றுக்கொள்..
இன்னொரு ஜென்மம் வரை
காத்திருக்கச் சொல்லாதே...


நீ கொஞ்சியதையும்
கோபங்கொண்டதையும்
கெஞ்சி விளையாடியதையும்
நினைத்து என் நாட்களைக்கடத்துகிறேன்..
எப்போது வருவாய் நீ மீண்டும்
என்னுடன் கோபங்கொள்ள....
என்ன கவலை?
கள்ளுப்பானைகளுடன்
பனைமரங்கள்

Tuesday, October 26, 2004



தண்ணீர் வற்றிய குளம்
கொக்குகள் "கட்வாக்" செய்கின்றன..


வறண்ட புல்வெளியில்
உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள்

தண்ணீர் தெளித்து எழுப்புங்கள்


மஞ்சள் கம்பளம் விரித்து
வசந்தகாலத்திற்கு வரவேற்பு

துணைதேடிக்கூவும் குயில்


வெயிலுக்கு பிடித்த குடைக்குள்
எப்போது மாட்டிய விண்மீன்கள்


எனக்கும் குழந்தைபிறந்துவிட்டது
இன்னும் அம்மா நிலவைப்பிடித்துதரவில்லை


புூ விற்கும் புூ
புூ வைத்துவிட யாரும் இல்லை


ரோஜாப்புூக்கள்
தேன் எடுக்கும் பட்டாம்புூச்சி

வெட்கிப்போயின வீரம்பேசிய
முட்கள்


தாமரை இலையில்
ஓடிவிளையாடும் நீர்துளிகள்

தாம் உயர்ஜாதியென
இறுமாப்புக்கொள்ளும்


பனைமரத்தில் சிக்கும் வரை
நீ சிறிது நான் பெரிது
சண்டைபோடும் காற்றாடிகள்...


பரம்பரை பரம்பரையாக
நிலவைப்பிடிக்க முயற்சிக்கும் பனைமரங்கள்


குளக்கரையில் குனிந்தபடி
முகம் பார்க்கும் மரங்கள்
கட்டமறந்த கைக்கடிகாரம்
கையை உறுத்தியது அடிக்கடி


கோவிலில்
பக்திப்பாட்டு

கூட்டம் சேர்க்கும்
புூசாரி


வீரம் பேசிய கோடரி
தோத்துப்போனது
வாழைந்தண்டிடம்


இரவெல்லாம் மழை
விடிந்தபோது
காணாமல் போயிருந்தது
நெல்வயல்


மீன்கள்தான்
ஆசையில்
மாட்டிக்கொள்கின்றன


அப்பாவி மண்புழுக்கள்
எப்போது ஆசைப்பட்டன?


தண்ணீர் லாரி

எங்கள்தெருவில்
குடங்களுக்குள் மழை


அலைகள்

கரை....

தீராத பகை

Monday, October 25, 2004

நைய்ந்து போன தலையணை

வெளியில் சொல்வதில்லை
விதவைப்பெண் சொன்ன கவலைகளை
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்

ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
கொட்டிக்கிடக்கும் சோற்றுப்பருக்கைகள்
எட்டி எட்டிப்பார்க்கும் அணில் பிள்ளை..
கோவிலில் திருக்கல்யாணம்
புூவிற்கும் விதவை
ஒளிமயமான எதிர்காலம்

தூக்கத்தில்
காத்திருக்கும்
இளைஞன்
செருப்புவிற்பவன்
கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் சோடி சோடியாக
செருப்புகள்

கால்களில் மட்டும் எதுவும் இல்லை

Sunday, October 24, 2004

அடிக்கடி அம்மாவிற்கு
சோதிடம் சொன்ன பல்லி
கதவிடுக்கில் வாலைத்
தொலைத்தது
வற்றிப்போன நதியில்
காத்திருக்கும் கொக்கு

பிடிவாதம்தான்...
அன்றுதான்
கூவ எத்தனித்த குயில்க்குஞ்சை
கொத்திக்கலைத்தன காகங்கள்
விறகுவெட்டி

வெயில்

நிழல்தேடி ஓடும் கால்கள்

கருணையுள்ள மரங்கள்

உல்லாசப்பயணம்
செய்யும் ஆடுகள்

ஞாயிற்றுக்கிழமை
இறுதிநாள்


கடற்கரையில்
காலடிஓசைக்கு
ஓடி ஒழியும் நண்டுகள்

அலைகளின் சீற்றத்திற்கு அஞ்சுவவதில்லை


கல்யாணமாகி வேற்று ஊர்
சென்றுவிட்ட போதும்
இன்றும் ஆற்றங்கரையில் காத்திருக்கும்
தேய்ந்த கஸ்தூரிமஞ்சள்...


பரந்த வயல்

பசியுடன் கதிர் அறுக்கும்
கூலிக்காரப் பெண்கள்...