Saturday, October 30, 2004

என் நாட்குறிப்பில்கிறுக்கியது

5



வெள்ளை நிறச்சுடிதாரும்
ஊதா நிறத் துப்பட்டாவும்
உன்னழகில் மேருகு பெற்றிருந்தன...
இன்னும் காயாது ஈரமாய் உன்கூந்தல்..
அதில்
மல்லிகைப்புூக்கள் பேறு பெற்றிருந்தன..

ஒரு நொடி
நான் உன்னைப்பார்க்க
நீ என்னைப்பார்க்க
கண்ணுக்குள் மின்னல் பாய்ந்தது

உன் கண்களின் பிரகாசம்
என்னை தலைகுனிய வைத்தது

ஆனாலும் என்மனம் இன்னும்
ஒரு தடவை அந்தப்பார்வை வேண்டுமென்று
அடம்பிடித்தது
மீண்டும் பார்த்தபோது நீயும்
தலைகுனிந்திருந்தாய்..

என்னை அங்கு எதிர்பார்த்திராததால்
எற்பட்ட உணர்ச்சிகள் உன்முகத்தில்

என் படபடப்பு
உன்னையும் தொற்றிக்கொண்டதோ?

நீ தலைநிமிர
மீண்டும் அதே மின்னல்...
குனிந்துகொண்டேன்

நீயும் நானும் மட்டும்
இப்போது தண்ணீர்குழாயருகில்
மூடி இருந்த குழாயை திறந்து
உனக்காக வழிவிட்டேன்...

நீர் உன்பாதங்களில் பரவி
வழிந்தோடியது...

நானும் கழுவி நிமிர்ந்தபோது
நீ நடந்துகொண்டிருந்தாய்...

நீ சென்ற பாதையில் ஈரமாக
காலடிகள்..
வேகமாகப்பின்பற்றினேன்

.........................................................


எதிரேபழைய நன்பன் வர
கொஞ்சம் நின்று பேசினேன்....

நீ
கூட்டத்தில் கலந்துவிட்டாய்...

அர்ச்சனை முடித்து
ஆறுதடவை சுற்றிவந்தும்
உன்னை எங்கும் காணவில்லை....

தீர்த்தக்கேணியருகில் வந்துபோது

படிக்கட்டில் நீதான்..
அமைதியாக அமர்ந்திருந்தாய்...
சின்னக்குழந்தையாக
மீன்களுக்கு பொரியிட்டு
வேடிக்கை
பார்த்திருந்தாய்...

நான் அருகில் வரவும்
உன் விழிமீனில் கேள்விக்குறி...

அவசரமாய் எழுந்துவிட்டாய்

....................................


"கொஞ்சம் பேசவேண்டும்"
கெஞ்சினேன்...

உனக்கும் எனக்கும் ஒரே படபடப்பு
வார்த்தைகள் உனக்குள்ளும்
காணாமல்ப்போயிருக்கவேண்டும்

அமர்ந்துகொண்டாய் ஆனாலும்
அமைதி...

மூன்று நிமிடம்
அதே அமைதி..
காற்றின் ஓசை மட்டுந்தான்

நான் வார்த்தை அடைத்து
மீண்டும் ஊமையாகிப்போயிருந்தேன்...

நீ தான் மௌனத்தைக்கலைத்து...

"என்ன?"

கேள்வி எழுப்பினாய்..
அதில் என்மேல்
உனக்கிருந்த இரக்கம்
கொஞ்சம் வெளித்தெரிந்தது...

அது எனக்கு
உயிர்தந்தது...

என்னுள் சுவாசம் மீண்டும்
ஆரம்பித்தது...

நின்றுபோயிருந்த இதயம்
உயிர்பெற்றது

..........................................


"ஒன்றுமில்லை சும்மாதான்
எப்படி இருக்கிறீர்கள்"
முட்டாள்தனமாய்கேட்டுவைத்தேன்...

மௌனமாக சிரித்தாய்..
ஆனால் கேலியோ கிண்டலோ
இம்மியளவும் இல்லை

"நான் போகவேண்டும் .............."

என் பெயரை இரண்டாவது
தடவை உச்சரித்திருக்கிறாய்...

உன் பெயரை
இருபதாயிரம் தடவை
நான் செபித்ததின்
பலன் தானோ?

"இருங்கள் ஒரு நிமிசம்"
நான் கெஞ்சினேன்...

இரக்கங்கொண்டாய் என்மேல்...

நீயாகவே பேசினாய்
"இப்போது என்ன படிக்கிறீர்கள்?"
"ஏன் விஞ்ஞானம் எடுக்கவில்லை?'
"கணக்கியல் யாரிடம் கற்கிறீர்கள்?"

பின் ஏதேதோ கேட்டாய்
இடையிடையே
உன்னைப்பற்றியும்கூட சொன்னாய்..

பேசிக்கொண்டேஇருந்தோம்...
ஒவ்வொரு நிமிடங்களும்
சொர்க்கத்தில் களிந்தது...

திடீரென நேரம் பார்த்ததுதான்
படபடப்பானாய்
"நேரமாகிவிட்டதுபோகவேண்டும்"

"இன்னும் ஒரு நிமிடம்"
நான் கெஞ்சினேன்..

"வேறொரு நாள் பார்க்கலாம்.
நேரமாகிவிட்டது"

"எப்போது?"

"அடுத்தவெள்ளி"

நீயாகவே நாள் குறித்தாய்
என் இரண்டாவது
சொர்க்கத்திற்கு..

நன்றிகள் கோடி உனக்கு

...................................................

நீ விடைபெற்றுச்செல்ல
என்னுள் ஏதோ உன்னுடன் சென்றது...

உன் மல்லிகை வாசம் இன்னும்
அங்கேயே என்னைச்சுற்றி..

சன்னிதியைக்கடக்கும் முன்
ஒரு தடவை திரும்பிப்பார்த்து
கையசைத்தாய்...

நான் நன்றியோடு எழுந்த நின்றேன்...

நீ என் பார்வையில்
மறைந்ததுதான் அடுத்தநொடியே
சொர்க்கத்தில் இருந்த நான்
பூமிக்கு தள்ளிவிடப்பட்டேன்....

பழையபடி கோவில் மணியும்
மேளதாளங்களும் காதில் ஒலித்தன...

மீண்டும் அமர்ந்துகொண்டேன்..

நீ அமர்ந்த படிக்கட்டை
பாசத்துடன் பார்த்தேன்..

மல்லிகைப்புூ ஒன்று..

உன் கூந்தலில் இருந்துதான்
வீழ்ந்திருக்க வேண்டும்..

கொடுத்துவைத்த புூ
பொறாமை கொண்டேன்
அந்தச்சின்னப்புூவிடம் கூட

என்னுடனேயே வந்துவிடு
எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்

என் சட்டைப்பையில் அதை
பத்திரப்படுத்திக்கொண்டேன்..


1 Comments:

Blogger முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அழகான கவிதை. நிறைய சம்பவங்கள் சொல்கிறது...அழகான மொழியும் அற்புதமான சம்பவங்களுமே இந்த கவிதையின் நாளங்கள் எனினும்... வழியும் காதல் உயிராகி கரைகிறது..

October 10, 2007 at 8:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home