Saturday, September 01, 2007

உஞ்சுக்


உஞ்சுக்


உஞ்சு இது வேறை ஒண்டுமி;ல்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தாஎங்கையோ இருந்து பிடித்து
வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன்.

எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவத்தில கேட்டை காலால உதைச்சுட்டு போயிருக்கிறாங்கள். அப்ப பயத்தில ஏனடா இந்த நாயை வளர்கிறம் என்று இருக்கும். அதற்குப்பிறகு அதற்கும் வயசாகிபோச்சு. ஒரு கட்டத்தில கண் தெரியாம போச்சு. ஒருநாள் இரவு எங்கட கிணத்தில விழுந்திட்டுது. பிறகு கறன்ட் இல்லாத நேரத்திலயும் விளக்கு வெளிச்சத்தில் வாளியைக்கட்டி அதை ஒரு மாதிரி அப்பா வெளிய எடுத்தார்.
அதற்க்குப்பிறகு அது கனகாலம் இருக்க இல்லை. காணாப்போட்டுது. அம்மா சொல்லுவா அது எங்கடவீட்டில செத்து எங்களுக்கு கஸ்டம் குடுக்கக்கூடாது என்று எங்கையோ போய் செத்துவிட்டதென்று. அதுக்குபிறகு நாய் இல்லாம கொஞ்சநாள் இருந்தம்.

பிறகு மாமா மீன்வாங்கப்போன இடத்தல ஒரு மண்ணிற நாய்க்குட்டி பிடிச்சு வந்தார். அது ஒரு பேய்பிடித்த நாய். இரவில எப்ப பாத்தாலும் வெற்றிடத்தைப்பாத்து குலைத்துக்கொண்டே இருக்கும். இரவில அதோட கரைச்சல் தாங்க முடியேல்லை என்று அம்மா மாமாக்கு பேசுவா. உண்மைதான் அப்ப எங்கட வீட்டைச் சுத்தி சுவரோ யன்னலோ இல்லை. அறைகள் மட்டுந்தான் அறுக்கையா இருக்கும் .விறாந்தையில தான் நாங்கள் படுத்திருப்பம். இந்த நாய் இரவில கேற்றில இருந்து குரைச்சுக்கொண்டு ஓடிவரும் பிறகு தாத்தாவின்ர மரக்கட்டில்ல பாஞ்சு ஏறிநின்று வயிரவர்கோயில் திசையில குரைக்கும். அம்மா சொல்லுவா வயிரவர் உலாவுறார் அதுதான் நாய் குரைக்கிறதென்று. இதால நான் ஒன்டுக்குபோகக்கூட வீட்டுப்படியிங்க பயந்திருக்கிறன். அப்படிப்போனாலும் நாய் குரைக்கிற பக்கம் பாக்காம ஒடி வந்து வீட்டுக்கை ஏறிடுவன்.

ஒரு நாள் நாய் பிடிக்கிறவங்கள் வந்தாங்கள். முதலே தெரிஞ்சதால எங்கட நாயை உள்ளை விட்டு கேட்டை பூட்டிட்டு நாங்கள் கேட்டில ஏறி விடுப்புப்பாத்துக்கொண்டு இருந்தம். கேற்றுக்கு அடில இருந்த ஓட்டைக்குள்ளால வெளியபோன எங்கட நாய்; அவனைப்பார்த்து வீரங்காட்டி குரைக்;க அவன் சுருக்கைப்போட்டு பிச்சு வண்டிலுக்கை போட்டுட்டான். பிறகு நான் ஓடிப்போய் அப்பாவைக்கெஞ்சி அப்பா ஒரு ஐந்து ரூவா குடுத்து விடுவிச்சார். பிறகு
அந்த நாய் வலிப்பு வந்து செத்துப்போயிட்டுது. அந்த நிறம் ராசி இல்லை என்று அம்மா சொன்னா.

அதுக்குப்பிறகும் அதே நிறத்தில வந்தது ஒன்றும் நிலைக்க இல்லை.

கனகாலத்துக்குப்பிறகு கறுப்பும் வெள்ளையும் நிறத்தில புதிசா ஒரு நாய்குட்டி அப்பா யாரிட்டையோ வாங்கி வந்தார். அதுதான் எங்கட கடைசி உஞ்சு. அது வளர்ந்து ரோட்டில யாரையும் போக விடாது. டுட்டரிக்கு போற பெடியங்கள் எல்லாம் காலதூக்கிகொண்டுதான் சைக்கிள்ள போவாங்கள். எப்படியாவது றோட்டுக்குப்போயிடுற அதை துரத்திப்பிடிச்சு உள்ள விடுறது ஒரு நாளைக்கு இரண்டு மூன்டுதரம் நடக்கும். வீட்டுக்கு வாறவையை
நாயிட்டையிருந்து காப்பாத்த அதை பிடிச்சு அமத்தி வைச்சிருக்கிறதும் அது நாங்கள் விடுப்புபார்க்க ஓடிப்போய் கடிக்கபோறதும் சாதாரணம்.

இந்தியன் ஆமி காலத்திலயும் அது மோப்பம் பிடிச்சு ஆமி காம்பிலயிருந்து நடக்க வெளிக்கிடவே குரைக்க ஆரம்பிச்சிடும். கடைசியா நாங்கள் இந்தியாக்கு வெளிக்கிடேக்கை அதுக்கு விளங்கியிருக்காது. ஏதோ இடம் பெயர்ந்துதான் போகினம் அடிக்கடி வந்து சாப்பாடு வைப்பினம் என்டு நினைச்சு ஏமாந்துதான் போயிருக்கும்