Friday, October 29, 2004

என் நாட்குறிப்பில் கிறுக்கியவை

4



நான் கனவில் அலறி
உன் பெயர் சொன்னது
அம்மாவின் காதுகளிலும்
விழுந்து விட்டிருக்க வேண்டும்
அன்புடன் பதை பதைத்து ஓடிவந்து
அருகே அணைத்து நின்றாள்

என்ன? ஏது? என்று கேட்டாள்
கனவு என்றதும்..
மௌனமாகிப்போனாள்
எதுவும் கேட்கவில்லை
ஆனால் மனதுக்குள்
கவலைகொண்டிருப்பாள்

என் வயதே அவளுக்கு
என் கதை சொல்லியிருக்கும்



தூக்கம் கலைந்தது
ஆனால்
துக்கம் மனதில் கசிந்தது

இரவில் சிந்தித்தது
மீண்டும் என்னை
இறுகப்பிடித்துக்கொண்டது..

எப்படி முடியும்...
ஒரு நாள்
பார்க்காவிட்டாலே
என் சுவாசமே நின்று போகிறது.
நீயில்லாத என்வாழ்வை
நினைத்துப்பார்க்;க முடியுமா?..

சொல்லாத காதலெல்லாம்
சொர்க்கத்தின் வாசல் வரைதானாம்

என் மௌனமே
எனக்கு எதிரியாகிவிடுமோ...




சொல்லிவிடலாமா ?
இல்லை சொல்லாமல்
கனவுடன் காத்திருக்கலாமா?..

சொல்லாத காதல்
நகராத தேர்போல
எங்கும் போய்ச்சேராது...

சரியான நேரத்தில்
சரியான முடிவு எடுக்கவேண்டும்
இல்லையேல்
வாழ்வே திசைமாறிப்போய்விடலாம்...

காதல் என்ற
ஒருவழிப்பாதையில்
யாரும் தானாக நுழைவதில்லை.
அதுதான்
எம்மை உள்வாங்கிக்கொள்ளும்.

உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.

ஏங்கே போய்முடியும்
போய்த்தான் பார்க்க வேண்டும்
அது
சொர்க்கத்திலும் சேரலாம்
சோகத்திலும் சேரலாம்..

ஆனால்
நடந்து தான் ஆகவேண்டும்
எல்லை வரை...

ஒவ்வொரு அடியும்
உறுதியாக இருக்கவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்

சும்மா
இருந்தால்
சோகம் முடிவாகிவிடும்

தூக்குத்தண்டனையேயானாலும்
உடனே கிடைத்தால்
வெதனை கொஞ்சம் தான்

காத்திருந்து சாவது
ஒவ்வொரு நாளும் சாவுதான்

சொல்லிவிட்டால்
விடை கிடைத்துவிடும்
விதியை அறிந்து கொள்ளலாம்



ஏதோ ஒரு தைரியம்
காதல் கொடுத்த தைரியம்
எதைப்பற்றியும் கவலைப்படவில்லை...
வேகமாய் தாயாராகிவிட்டேன்

அம்மாவிற்கு ஆச்சரியம்
என் வேகம் பார்த்து
கேள்விகளோடு என்னை நோக்கினாள்

"ஒன்றும் இல்லை
கோயிலுக்குத்தான்
என் நன்பன் கூப்பிட்டிருந்தான்"
எனக்கூறி விடைபெற்றேன்
சாப்பிடவில்லை..
ஏற்கனவே நேரமாகிவிட்டது
நல்ல காலம் அம்மா வற்புறுத்தவில்லை..
ஆண்டவனைத்தரிசிக்க சாப்பிடாது சென்றால் தான்
பக்தி இருக்குமாம்...
அவள் நம்பிக்கை
என்னைக் காப்பாற்றியது...

சைக்கிளை வேகமாக மிதித்தேன்
எப்படியும் நீ நடந்துதான் போவாய்
உனக்கு முன்னால் நானங்கு இருந்தால் நல்லது
வழியில் உன்னைக்காணவில்லை....
நீ ஏற்கனவே சென்றுவிட்டிருப்பாயோ?...
அல்லது
வராமல்விட்டிருப்பாயோ?

வழக்கமாய் நீ செருப்பு வைக்கும்
கற்புூரப்பாட்டியிடமே
நானும் செருப்புவைத்தேன்...
உன்செருப்பு அங்கில்லை
ஒரளவு உறுதி..

தேங்காய் பழம் புூ வைத்த
அர்ச்சனைத்தட்டை நீட்டினாள் கற்புூரப்பாட்டி
வாங்கிக்கொண்டு கால் கழுவுமிடம் சென்றேன்

அருகே
கற்புூரம் வாங்கிக்கொள்ளச்சொல்லி
சிறுமி ஒருத்தி
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு ருபாய் கொடுத்து ஒன்றைமட்டும் வாங்கிக்கொண்டு
திரும்பியபோதுதான் அந்த
இன்ப அதிர்ச்சி!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home