Sunday, October 31, 2004

ஒரு நாடுதேடி...




9 நவம்பர் 90 இரவு சுமார் 9 மணி

எங்கும் இருள்.. அமைதி..

படகை இயக்கிய இயந்திரத்தின்
பட பட ஓசையும்
முன்னேறும் படகில்
வீரத்துடன் மோதி உடையும்
அலைகளின் ஓசையும்
பின்னாலே படகு விரட்டிவிடும்
கடல் நீரின் சத்தமும்தான்...

அன்று வானத்தில் நிலவுக்கு
விடுமுறைபோல....
ஓரிரண்டு நட்சத்திரங்கள் தான்
கண்சிமிட்டிப்பேசிக்கொண்டிருந்தன...

சுற்றி எங்கும் கறுப்பாய்க் கடல்
ஆழம் என்ன என்று
வெளியில் காட்டாத கறுப்புக்கடல்
அமைதியான கடல்

படகு அலையில் மோதி அசைந்தாலும்
அது தொட்டிலில் வைத்து
ஆட்டியது போலத்தான்
சுகமாக இருந்தது..

அதனால் தான்
வேதனை, வெறுப்பு, விரக்த்தி, என
அத்தனையும் மறந்து
அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் அமைதியாக
அடங்கிப்போய் இருந்தார்கள்....

பலர் கண்மலர்ந்துவிட்டிருந்தனர்...
போதும் போதும் பட்டதுன்பம் போதும்
இனி சுதந்திரம் பெற்றஒரு புூமியில்
கண்விழிப்போம் என்று எண்ணியிருப்பார்களபோலும்....

அழுது அழுது ஓய்ந்த
கண்கள் அமைதியாக
ஓய்வெடுத்துக்கொண்டிந்தன...

படகின் முன்னாலே
இருந்தவர்கள் வாலிபர்கள்..
அலையடித்து மேலே கொட்டும்
கடல்நீரைககொஞ்சம்கூட
சாட்டைசெய்யவில்லை...
எத்தனையோ பார்த்தாயிற்று
இது என்ன என்று
அசைந்துகூடக்கொடுக்கவில்லை...

குளிர்ந்த காற்று மட்டும்தான்
அரவனைத்துச்சென்றது...
காதுக்குள் கவலைவேண்டாம் என்பதுபோல்...
ஏதேதோ அதன் மொழியில்
சொல்லிவைத்தது...

பாதிக்கண்
மூடியிருந்த என்கண்களில்
உன் விம்பங்கள்;...
உன் பேச்சொலிகள்...


9 நவம்பர் 90 அதிகாலை ஒருமணி

காதலியின் நினைவில்இருந்த நான்
எப்போது கண்ணயர்ந்தேன்?..
தெரியவில்லை...

படகின்இயந்திரம் நின்றுவிட்டிருந்தது...

தாலாட்டு நின்றதால் தடுமாறிவிழித்த
குழந்தைகள்போல் எல்லோரும்
என்னாயிற்று என்று சுற்றுமுற்றும்
பார்த்து எழுந்துகொண்டோம்....

தூரத்தில் இருளில் இருளாய்
மரங்கள் தெரிந்தது...


"வந்துவிட்டோமா மண்டபம்?" என்று
யாரோ மகிழ்ச்சிபொங்கக் கேட்டார்கள்...

இல்லை இது இரணைதீவு....
எனப்படுகின்ற இரட்டைத்தீவு...

'இன்று இங்குதான்
நாளை இரவு
இந்தியா போகிறோம்...
ஒருநாளுக்கு வேண்டியதை
எடுத்துக்கொண்டு இறங்குங்க.."
படகோட்டியுடன் வழிகாட்டியாகவந்த
மீனவநன்பன்
உத்தரவிட்டு படகில் அடிப்பகுதியில்
தேங்கியிருந்த தண்ணீரை எடுத்துவெளியே கொட்ட
ஆரம்பித்துவிட்டான்....

பெரிதாக அலைகள் இல்லை
ஆனாலும் ஆழம் தெரியவில்லை..
இருளாய் இருந்தது..

தூரத்தில் தெரிந்த மரங்கள்
தைரியம் தந்தது..
கடவுளை வேண்டிக்கொண்டு
ஆழம்தெரியாக்கடலில் காலைவிட்டோம்...

இரண்டடியில் தரை...
கால்களை வரவேற்று
தாங்கிக்கொண்டன..

யாரோ ஒருவர்
முன்னால் செல்ல
தட்டுத்தடுமாறி பின்னால்
சென்றோம்...

கோஞ்சத்தூரத்தில்
அமைதியாக ஒரு தேவாலயம்...
அடைக்கலமா வாருங்கள் வாருங்கள்
என்று எம்மை அழைத்தது...

அதையொட்டி இரண்டு
கட்டடங்கள் பள்ளிக்கூடம்போலும்..
நல்ல காற்று...
தரையைத்தட்டிப்படுத்துக்கொண்டோம்....

பள்ளிக்கூட வகுப்பறைகள் தான்
ஆனால்
மாணவர்களை விட ஆடுகள்தான்
அங்கே அதிகநேரசெலவிடும்போல
எங்கும் அவைபோட்ட புழுக்கைகள்...

அன்று நெடுநாள்க்கழித்து
துப்பாக்கிஓசையும்;
குண்டுவெடிச்சத்தமும் இல்லாத
ஒரு இரவை
களித்தோம் எனலாம்....

மனதுக்குள் ஏதோ ஏதோ
பழைய நினைவுகள்



9 நவம்பர் 90 காலை 7 மணி

அயர்ந்து போயிருந்த எம்மை
அதிகாலையில்
புழுனிகள் இசைபாடி
துயிலேழுப்பின...

இத்தனைநாள்தான்
துப்பாக்கிசத்தம்கேட்டும்
கண்விழித்தீர்கள்
இன்றாவது
இசைகேட்டுவிழித்தேழுங்கள்
என்று இரக்கம்போலும்...

இரவு நாம் அயர்ந்து தூங்கிய
இடம் ஒரு வகுப்பறைதான்...
ஆனால் வானம் திறந்த வகுப்பறை...
பெயருக்கு ஏதோ உடைந்த
ஓரிரண்டு ஓடுகள்மட்டும்சிலாகைகளில்
ஒட்டிக்கொண்டிருந்தன...

இரவில் எமக்கு
அடைக்கலந்தந்த
இரணை தீவை
இரசிக்க ஆசைகொண்டு
வெளியில் வந்தோம்...

அமைதியான மீனவத்தீவு

கிழக்கில்
கற்கள் மட்டும்போடப்பட்டு
முடிக்கப்படாத ஒருஇறங்குதுறை...
தமிழனுக்கு இதுபோதும் என்று
நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்....

அதையடுத்து
பரந்தநீலக்கடல்..
அதன் எல்லையில்
காக்கைதீவு எருமைத்தீவு
என இரண்டு தீவுகள்
அதற்கு அப்பால் வேறாவில் கிராமம்...
(மீனவ நன்பனிடம்
பிற்பாடு கேட்டுத்தெரிந்துகொண்டோம்)

மேற்கில் வறண்டுபோன
வடக்கு இரணை தீவின் நிலப்பரப்பு

அங்கு எதுவும் இல்லை....
எங்கும் முட்புதர்களும் கள்ளிச்செடிகளுந்தான்
இடையிடையே தலைநீட்டிய
முருகக்கற்கள்..
ஒரிரண்டு புூவரசு மரங்கள்...

தூரத்தில் ஓரிரண்டு
குடிசை வீடுகள்...
மனதில் மகிழ்ச்சி...
ஒரு நிம்மதி...
ஓ மனிதர்கள் வசிக்கிறார்கள்...
எம்மைத்தவிர வேறு
மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள்...
நாங்கள் இன்னும் தனித்துப்போய்விடவில்லை...
ஒரு பாதுகாப்பு உணர்வு...

தேவாலயம் முகப்பில்
கருணைபொங்கும் மாதாவின் திருஉருவம்....

பார்த்த உடன் மனதில்
உள்ள சஞ்சலங்கள் எல்லாம்
ஓடிவிட்டச்செய்யும் தெய்வீகம்...

தேவாலயத்தை ஒட்டி
விருந்தினர்விடுதி...

அப்பால் இரண்டுவீடுகள்....
ஒரு கூட்டுறவு சங்கக்கடை...

எதிரே கடற்கரையோரம்....
தேநீர்கடை சேர்ந்தற்போல்ஒருசைக்கிள் கடை...
இது தான் வடக்கு இரணை தீவு...


காலைக்கடன்கள் முடித்து
திறக்காத தேநீர்க்கடையின் வாசலில்
நெடுநேரம காத்திருந்தோம்.....

யாரும்திறப்பதாகத் தெரியவில்லை...

அருகில் இருந்த குடிசையில்
ஒரு வயதானவர்
எம் நிலைபார்த்து இரக்கம்கொண்டார்
விபரம் சொன்னார்

இரண்டுநாட்கள் முன்னால்
இரவு மீன் பிடிக்கவந்த இந்தியமீனவர்களை
இலங்கை விமானப்படை கெலி தாக்கியதாம்.....

காலையில்மீண்டும் வந்து
உள்ளுர்மீனவர்களையும்
தாக்கியிருக்கி அட்டூழியம் செய்ததாம்......

இதனால்
மீனவர்கள் பயந்துபோய்வெளியேவரவில்லை...
படகுச்சேவையும் நின்றுபோனது..
பலர் அக்கரையில்
மாட்டிக்கொண்டார்கள்...

ஏதோவேலையாகச்சென்ற
தேநீர்கடைக்காரரும்
மறுகரையில் மாட்டிக்கொண்டார்...

பேசிக்கொண்டு இருக்கும்போதே
கைகளில் தேநீர் குவளைகளுடன்
வெளியேவந்தார் அவர் மனைவி...

சுடச்சுட அவர்கள்
கொடுத்த கறுப்புத்தேனீர்
கடற்கரைக்குளிருக்கு
இதமாய்இருந்தது..

4 Comments:

Anonymous Anonymous said...

wow....it's a great poem

November 14, 2004 at 10:25 AM  
Blogger ப்ரியன் said...

நல்லதொரு தொடக்கம் நல்லதொரு தொடர்க(வி)தையாய் வரும் தொடருங்கள் மொத்த பதிவையும் படித்து விமர்சனம் தருகிறேன்

November 15, 2005 at 1:51 AM  
Anonymous Anonymous said...

Fine your all poems and more pain full memories.... specially "Searching a country...." did you document it in any hard copies like books or magazines!!! it is better to do that. and love poems too fine but, i am suprised ur love experience.....Nowadays, we can not see this kind of love!!!!continue your work.....

May 22, 2007 at 2:46 AM  
Anonymous Anonymous said...

Fine your all poems and more pain full memories.... specially "Searching a country...." did you document it in any hard copies like books or magazines!!! it is better to do that. and love poems too fine but, i am suprised ur love experience.....Nowadays, we can not see this kind of love!!!!continue your work.....-Aatharshan

May 22, 2007 at 2:47 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home