Sunday, October 31, 2004

என் நாட்குறிப்பில்கிறுக்கியது

6



என்றும் இல்லாது
எனக்குள் புதிதாய்
புத்துணர்ச்சி..
காதல் கொடுத்த
புத்துணர்ச்சி!!!!!

இரண்டு
இதயம் பெற்ற
புது வேகம்..

கவலைகள் என்று
நினைத்தது
எல்லாம்
கரைந்து போனது...

பறப்பது போல
ஒரு உணர்வு

வாழ்வில் பெரிது என்று
நினைத்தது
எல்லாம்
சிறிதாய் தெரிந்தது..

என்னால் முடியும்
என்னால் முடியும்
வாழ்வில் வெல்ல
என்னால் முடியும்..

நம்பிக்கை பிறந்தது..
காதல் கொடுத்த நம்பிக்கை..

நீ என் கூட வந்தால்
எதுவும் முடியும்



புது உத்வேகத்துடன்
எழுந்தேன்..

அன்று முழுவதும்
இன்பமாய் களிந்தது

இரவானதும் மீண்டும் ஏதோ
என்னை வாட்ட ஆரம்பித்தது...

என்னதான் நீ பேசினாலும்
இன்னும்
நான் காதல் சொல்லவில்லையே
என் இதயம் காட்டவில்லையே..

என்னை நீ
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ..
ஏக்கமாய் இருந்தது...

தூக்கம் கொஞ்சம்
தொலைந்தது..

தூக்கம் வேண்டி
புத்தகத்தில்
கண்பரப்பினேன்..

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

இந்தவரிகள்
ஏதோ எனக்கு
எடுத்துச்சொன்னது....

மீண்டும் மீண்டும்
படித்தேன்.

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

என் தினக்குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொண்டேன்...

வாழ
கற்றுக்கொள்வோம்
கூடவே
காதலும் செய்வோம்...

தீர்மானித்துக்கொண்டேன்...




மூன்று நாட்கள்
உன்னைப்பார்க்கவில்லை.
எனக்கு நானே
விலங்கிட்டுக்கொண்டேன்.

கொஞ்சம் வெற்றிதான்

உள்மனம் மட்டும்
உன்னைப்பார்க்கவேண்டும்
என்று அடிக்கடி விண்ணப்பிக்கும்

என் மனசாட்சியிடம் இருந்து
தொடர்ந்து
நிராகரிப்புத்தான்

ஒருநாள் அது
கோபங்கொண்டு
"உனக்கு மனசாட்சியே
இல்லையா" என்று
கண்ணீர்விட்டது

'சரி '
கொஞ்சம்
உருகியது மனசாட்சி

சைக்கிளை எடுத்துக்கொண்டு
மீண்டும் உன்வீட்டருகில்
வலம் வந்தேன்
உன் தரிசனம் கிடைக்கவில்லை...

"நேரம் ஆகிவிட்டது"
என் மனசாட்சி நச்சரித்தது
திரும்பி விட்டேன்...

பெரிதாக ஏதோ கட்டுப்பாடுகள்
விதித்துக்கொண்டேன் என்ற
பெயர்தான்
உள்ளே எப்பொதும்
உன் நினைவுதான்

படிப்பில் என்மனம் செல்லவில்லை.

பார்க்கும்
பெண்கள் எல்லாம்
நீயாக தெரிந்தார்கள்
ஒடிச்சென்று
முகம் பார்த்தால்
அது யாரோ என்று
உறைத்தது...

வெள்ளிக்கிழமைவரை
நான் மூச்சைப்பிடித்துக்கொண்டேன்...

இதுவரை
எந்த ஒரு நாளையும்
இந்த அளவு
எதிர்பார்த்து
ஏங்கித்தவித்ததுகிடையாது

இந்த வெள்ளிக்கிழமைக்காக
கழியும் ஒவ்வொரு
நொடிகளை எண்ணிக்கொண்டேன்..

உன்பார்வவைக்காக
என் மனம்
கெஞ்சி அழுதது...

இதோ வெள்ளிக்கிழமைவந்துவிடும்
நானே என்னைத்
தேற்றிக்கொண்டேன்..

பாதியிலேயே
என் மனசாட்சிபோட்ட
தீர்மானம் எல்லாம்
காற்றில் பறந்தது...

வியாழன் மாலையில் நீவரும் பாதையில்
காத்திருந்தேன்...



நேரம் ஆகிக்கொண்டே இருந்தது
இருள் சூழஆரம்பித்துவிட்டது..

தெருவில்
ஆட்கள் நடமாட்டம்
கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்துவிட்டது..

போகும் ஓரிரண்டு பேரும்
என்னை கேள்வியோடுபார்த்தார்கள்...

இன்னும் எத்தனைநேரம் காத்திருப்பது?...

நீ வருவாய்என்றால்
காத்திருப்பது ஒன்றும்
கஸ்டமில்லை

தூரத்தில் இரண்டுபிள்ளைகள்
சைக்கிளில் வருவது
தெரிந்தது.... அதில் ஒன்று நீதான்
உள்மனம் சொன்னது...

வலது புறம் வந்த பிள்ளை
இடதுபுறம் இருந்த குறுகிய ஒழுங்கையில்
சென்றுவிட

நீ மட்டும் நேராய் வந்தாய்..

".............." உன்பெயர்சொல்லி அழைத்தேன்....

தினமும் உன் பெயரை மனதுக்குள் மட்டும்
உச்சரித்துபழகியிருந்தேன்...
இன்றுதான் வாய்ப்புவாய்த்து
உன் பெயர்சொல்லி அழைக்க

உன் பெயர்கேட்டு திடுக்கிட்டுவிட்டாய்.
வெடவெடத்துப்போய் நின்றுவிட்டாய்...

"நான்தான் ..............."

"ஐயோ என்ன செய்யுறீங்கள் இங்கே" கோபம் தெறித்தது வார்த்தைகளில்.

உனக்கில்லாத உரிமையா?

"உங்களைப்பார்க்கத்தான் வந்தன்"

"ஐயோ என்னால இங்கு நின்று கதைக்க முடியாது. கோயிலுக்குத்தானே வரச்சொன்னனான்"

"மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..................... "

"சரி நேரம் போச்சு நான் போறன். அம்மா ஏசுவா"
ஆனாலும் நீ அங்கு தான் நின்றிருந்தாய்.
நான் விடைகொடுக்க காத்திருந்தாய்

"போகிறேன் என்று சொல்லாதுங்கோ
பொயிற்றுவாறன் என்று சொல்லுங்கோ"
விடைகொடுத்தேன்...

நீ புன்னகைப்பது தெரிந்தது.

விடைபெற்றுக்கொண்டாய்.

அன்று கொஞ்சம் நிம்மதி
கொஞ்சம் சுவாசித்துக்கொண்டேன்


இரவுகள் என்னைக்
கொஞ்சம் மன்னித்துவிட்டன..

காலையில் மீண்டும்
புது வேகம்...
மனசெல்லாம் குதூகளிப்பு..

அடிக்கடி நேரம் பார்த்து
ஏற்றாற்போல் இயங்கிக்கொண்டிருந்தேன்...

எட்டு மணிக்கு அங்குஇருந்தாக வேண்டும்
ஏழு இருபதிற்கே வீட்டிலிருந்து
புறப்பட வேண்டும்...
எனக்குள் நேர அட்டவணை
ஏற்கனவே தயாராகிவிட்டது....

யாரும் இடையில்
புகுந்து குழப்பம் செய்துவிடக்கூடாது...
இடையிடையே முருகனை
துணைக்கு அழைத்தேன்...

அம்மாவுக்கு ஏதோ சந்தேகம்...
விசித்திரமாகப்பார்த்தாள்.
என்றுமில்லாது
நான் சைக்கிளைத்
துடைத்தது கண்டு
புன்னகை செய்தாள்...

"வெள்ளிக்கிழமை விடிந்தால்போதும்
உனக்கு பக்தி..."
ஏதோ சொல்லவந்து பாதியில் நிறுத்திக்கொண்டாள்....

அவள் போகும் வாரை காத்திருந்து
கண்ணாடிபார்த்து
தலைவாரிக்கொண்டேன்...

இருக்கின்ற சேட்களில்
எனக்குப்பிடித்தஒன்றைப்
போட்டுக்கொண்டு...

தெருவில் இறங்கினேன்..

என்னை
எதுவும் கேட்காமலே
என் சைக்கிள் உன் வீட்டுத்தெருவில்
பயணித்தது...

தூரத்தில்
கோவில்மேற்கு வீதியில்
நீ சென்றுகொண்டிருந்தாய்..

உனக்குமுன்பாக வந்து
கற்புூரம் விற்கும் பாட்டியருகில்
காத்திருந்தேன்...

நீ சிறிதாக புன்னகை செய்தாய்
என்னைக்கண்ட மகிழ்ச்சி
உன் முகத்தில் தெரிந்தது...
ஆனால் எதுவும் பேசவில்லை...
அதுதான் கண்கள்பேசுகின்றனவே என்று நினைத்திருப்பாயோ?

கொஞ்சம்
இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தேன்...

நீ கண்களை மூடி
பிரார்த்திக்கும் போதுமட்டும்
நான் உன் முன்வந்து
உன்னை பிரார்த்தித்துக்கொள்வேன்.....
எதுவும் தெரியாததுபோல் நீ வந்தாலும்
உனக்குள் கொஞ்சம் கோபம்
உன்முகத்தில் தெரிந்தது....

வைரவர்கோயில் வாசலில்
நான்
உன்னைப்பார்த்துப் பிரார்த்தித்தபோது
நீ கோபங்கொண்டு...
கையில் இருந்த செம்பருத்திப்புூவை
என் முகத்தில் வீசியடித்தாய்..

அன்றுதான்
முதன் முதல் உன்கோபம் பார்த்தேன்..
அழகாகத்தான் இருந்தாய்..

நீயும் கொஞ்சம் நெருங்கிவிட்டாய்
இல்லையேல் எப்படி கோபம் வரும்..

படிக்கட்டு வந்தும் நீ மௌனம்விரதம்

"ஏன் பேசக்கூடாதா?"

"என்ன பேசவேண்டும் நான்?"
வேண்டுமென்றே
கேள்விகேட்டு என்னை வம்புக்கழைத்தாய்....

"நிறைய இருக்கிறது. எங்கள்...
இல்லை இல்லை உஙகளது எதிர்காலம்
என்னுடைய எதிர்காலம்..."

"என்ன எதிர்காலம்"
விதண்டாவாதம் பண்ணினாய்

"சரி கொஞ்சம் சிரியுங்கள் சந்தோசமாக இருக்கலாம்"
சமாதானத்திற்கு அழைத்தேன்...

வாயைக்கோணலாக்கி சிரித்தாய்...

"உங்கள் ஊர் வவுனியாதானே"
சிரித்தபடி சொன்னேன்

"அப்படியெனடா நீங்கள் மாங்குளமா?"
நீயும் சிரித்தபடிகேட்டாய்

"பொல்லாத வாய்க்காறி"
மனதுக்குள் சொன்னது
உனக்கு
கேட்டுவிட்டது

கோபத்தில் மறுபக்கம் திரும்பிக்கொண்டாய்

எத்தனை தடவை உன் பெயர் சொல்லியும்
நீ திரும்பவே இல்லை

"கோபமா"

உன்னிடத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

" மன்னிச்சுக்கொள்ளுங்கோ ..............."
கைகளை இறுகப்பற்றிகெஞ்சினேன்

அன்றுதான் முதல் முதல் உன்கைபிடித்தேன்.
சில்லென்றுவாழைத்தண்டுபோல.
மென்மையான அந்தக் கைகளை
இறுக
ஆனால்
உனக்கு வலிக்காது பிடித்துக்கொண்டேன்.

ஒரு கையால் உன் கன்னம் தொட்டுதிருப்பினேன்

உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்

உன்கன்னங்களில் கண்ணீர்
கலங்கிப்போனேன்

"ஏன் அழுகிறீங்கள்?"

நீ பதில் சொல்லவில்லை..

ஆனால் நான் உணர்ந்தேன்.
பெண்கள் மனது என்பது
மலர்களைப்போல.
மென்மை.. மென்மை.. மென்மை..

உணர்ச்சிகள் அங்கு அமைதியாக
உறங்கிக்கொண்டு இருக்கும்

சின்னதாய் ஒரு கல்லும்
அலையை ஏற்படுத்துவதுபோன்று
சின்ன சம்பவம்கூட
அவர்கள் அமைதியைக்குலைத்துவிடும்

கவலையா மகிழ்ச்சியா கண்ணீர்தான்
அவர்கள் வெளிப்பாடு...

உன் பூமனதை இனி
புண்செய்வதில்லை
முடிவு செய்துகொண்டேன்

இரண்டு நிமிடம்தான்
நீயே கண்ணீரைத்துடைத்து

என்னை ஏறிட்டாய்....

உன் கண்களில்
ஏதோ ஏதோ
வார்த்தைகள்
புதைந்து கிடந்தது..

பார்வைகளுக்கென்றே
ஒரு அகராதி
இருந்திருந்தால்
என்ன சொல்ல விளைகிறாய்
அறிந்திருப்பேன்...

புன்னுறுவல் செய்தாய்...

இப்போது கண்ணீர் விட்டகண்களில்
சின்னதாய்ப் பிரகாசம்..

ஆவலாக எதையோ
கைப்பையிலிருந்துவெளி எடுத்தாய்
பிரித்தபோது அதில்
இரண்டு லட்டுக்கள்

எத்தனை அன்பு உனக்கு
என் அன்னையின் அன்பை
உன்னிடம் கண்டேன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home